இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் (IRNA) செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அந்த செய்தி விவரிக்கிறது. ஹெலிகாப்டரில் இருந்த இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்பட மேலும் பலர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர் அஜர்பைஜானில் இருந்து திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ்
ஏன் அஜர்பைஜான் சென்றார்?
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அரஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறப்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட ஒரு குழுவுடன் அஜர்பைஜான் நாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையே மனகசப்புகள் நிலவுகிறது. 2023 ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அஜர்பைஜான், இஸ்ரேலுடன் ராஜாங்க உறவுக் கொண்டுள்ளது. ஆனால், இரான் இஸ்ரேலை தனது முக்கிய எதிரியாக கருதுகிறது.
இருந்த போதிலும் அரஸ் நதியில் கட்டப்படும் இந்த மூன்றாவது அணையின் திறப்பு நிகழ்விற்காக இரான் அதிபர் சென்றார். இந்த அணை இரண்டு நாடுகளும் சேர்ந்து திட்டமிட்டு கட்டிய அணையாகும்.
இரண்டு நாடுகளுக்கும் சில கருத்து வேற்றுமைகள் நிலவினாலும், இந்த அணை திட்டமானது 'நட்பின் சின்னம்' என்று இரான் அரசு ஊடகம் குறிப்பிடுகிறது.
இந்த அணை ஞாயிற்றுக்கிழமை விபத்து நடப்பதற்கு ஒரு சில மணி நேரங்கள் முன்பு திறக்கப்பட்டது.
என்ன நடந்தது?
அணை திறப்பு நிகழ்வு முடிந்து இரான் திரும்பும் வழியில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. அஜர்பைஜான், இரான் எல்லை பகுதியானது காடுகளும், மலைகளும் நிரம்பிய பகுதி. அந்தப் பகுதியில் பயங்கர பனிமூட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில், இரானின் தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கி.மீ. முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையில் மோதியுள்ளது.
உடனடியாக அந்தப் பகுதிக்கு மீட்புக் குழு ஒன்று அனுப்பப்பட்டது. துருக்கியும் ஆள் இல்லா விமானத்தை தேடுதல் பணிக்காக அனுப்பியது. ரஷ்யாவும் ஒரு மீட்புக் குழுவை அனுப்பியது.
நீண்ட தேடுதல் முயற்சிக்கு பின்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்த இடத்தை தேடுதல் குழுக்கள் கண்டுபிடித்தன. ‘அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை,’ என முதலில் இரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. பின்னர் இரான் அரசு அதிகாரபூர்வமாக அதிபர் இப்ராஹிம் ரைசி இறந்ததை உறுதி செய்தது. இரான் மீதான பல்வேறு நாடுகளின் பொருளாதார தடை காரணமாக, அந்நாட்டில் விமான போக்குவரத்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த இப்ராஹிம் ரைசி?
இப்ராஹிம் ரைசி புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் மதக் கல்வியை பயின்றவர். அதுமட்டுமல்லாமல் அக்கால முஸ்லிம் அறிஞர்கள் பலரிடம் இஸ்லாமிய இறையியல் கல்வியை பயின்றார்.
தனது 20ஆவது வயதில் வழக்குரைஞராக பயிற்சியை தொடங்கிய அவர், 25 வயதில் இரான் தலைநகர் தெஹ்ரானில் துணை வழக்கறிஞரானார்.
1988 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதனை மேற்பார்வை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழுவில் இப்ராஹிம் ரைசி இருந்தார். இதன் காரணமாக அவரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அமெரிக்காவும் அவர் மீது பொருளாதார தடை விதித்தது.
இப்ராஹிம் ரைசி தீவிர பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்ட கடுமையான மத குருவாக இரானில் கருதப்படுகிறார். 2017-ம் ஆண்டில் முதல் முறையாக அதிபர் பதவிக்கு ஹஸன் ரௌஹானிக்கு எதிராக போட்டியிட்டு அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.
அந்த தேர்தலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஹஸன் ரௌஹானி இரானுக்குள் ஒரு மிதவாத தலைவராக கருதப்பட்டார். 2015ம் ஆண்டு இரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் அணு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2016 காலகட்டத்தில் இரான் மீதான சர்வதேச தடைகள் நீக்கப்பட்டன. இதில் ரெளஹானிக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
இரான் சட்டப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் தேர்தலுக்கு போட்டி போட முடியும்.
இதன் காரணமாக 2021 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இப்ராஹிம் ரைசி இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். அவர் பெற்ற வாக்குகள் 62 சதவீதம். ஆனால், 2021 தேர்தலில் மொத்தமே 48.8 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. மிதவாதிகளும், சீர்திருத்தவாதிகளும் அந்தத் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்பட்டது.
2021 தேர்தலில் வென்ற அவர் தன்னை இரானின் ஒரு சக்திவாய்ந்த தலைவராக நிலை நிறுத்திக் கொண்டார்.
விபத்திற்கு சதித்திட்டம் காரணமா?
இரான் அதிபர் மரணத்திற்கு தங்களது அஞ்சலியை அஜர்பைஜான், இந்தியா, பாகிஸ்தான், வெனிசுலா, அரபு அமீரகம், ரஷ்யா உள்ளிட்ட பல உலக நாடுகள் பகிர தொடங்கி உள்ளன. ஆனால், அதே சமயம் இது விபத்தா அல்லது திட்டமிட்ட சதித்திட்டமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் சக் ஷுமர், "இந்த விபத்தில் எந்த சதித்திட்டமும் இருப்பதாக தெரியவில்லை,” என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே நேரம், நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்போம், விசாரணையை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுக் கட்சி தலைவரான மைக்கேல் வால்ட்ஸ் "இது நல்லதே" என்று கூறியுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பகிர்வு ஒன்றில், "ரைசி அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னும் பின்னும் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாகத் திகழும்" என்று புளோரிடாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிக் ஸ்காட் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் பாதுகாப்பானதா?
ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஒரு அமெரிக்கத் தயாரிப்பாகும். அமெரிக்க ராணுவ தரவுகளின்படி, இந்த விமானம் 1971 ஆன் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, அமெரிக்கா மற்றும் கனடா உடனே பயன்படுத்தத் தொடங்கின.
இந்த ஹெலிகாப்டர் தீயணைப்பு படை வீரர்கள் பயன்படுத்தவும் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காகவுமே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. விபத்துக்கு உள்ளான இந்த குறிப்பிட்ட ஹெலிகாப்டர் 15 பேர் பயணிக்கும் வண்ணம் மறு வடிவம் செய்யப்பட்டது.
இரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால், அந்நாட்டு வானூர்திகளுக்கான உதிரிப்பாகங்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறது. இதனால் அங்கு அவ்வப்போது விமான விபத்துகளும் நடக்கின்றன.
இந்தியப் பிரதமர் மோடி கூறுவது என்ன?
இந்தியப் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பகிர்வில், ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இரான் உறவை வலுப்படுத்தியதில் அவரது பங்களிப்பிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Deeply saddened and shocked by the tragic demise of Dr. Seyed Ebrahim Raisi, President of the Islamic Republic of Iran. His contribution to strengthening India-Iran bilateral relationship will always be remembered. My heartfelt condolences to his family and the people of Iran.…— Narendra Modi (@narendramodi) May 20, 2024
http://dlvr.it/T77SCt
Monday, 20 May 2024
Home »
» இரான் அதிபர் மரணம்: என்ன நடந்தது, ஏன் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார், இது விபத்தா சதித் திட்டமா?!







0 comments:
Post a Comment