சென்னை மெரினா பீச்சில் வெளிநாட்டு இளைஞர் ஒருவர் ஆங்கிலத்தில் மசாலா பொரி கேட்டபடி உரையாட, கடைக்கார இளம் பெண்ணும் அவருடன் ஆங்கிலத்திலேயே பேசுகிறார். ’தங்கச்சி’ என அழகாக அவர் அழைக்கும் இந்த வீடியோ வைரலாகி ‘வாவ்’ சொல்லவைத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் ஆங்கில புலமையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், விவேகானந்தர் இல்லம் எதிரிலுள்ள மெரினா பீச்சில் மசாலா பொரி விற்றுக்கொண்டிருக்கும் அந்த இளம்பெண்ணைச் சந்தித்தோம். படபடக்கும் பட்டாம்பூச்சி கண்களுடன் அதே புன்னகை மாறா முகத்துடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
“என் பேரு வெண்ணிலா. எனக்கு 21 வயசு. நாங்க மீனவர் சமூகம். அயோத்தி குப்பம் ஹவுஸிங் போர்டுலதான் லீஸுக்கு குடியிருக்கோம். எங்கப்பா பேரு ஆறுமுகம், அம்மா பேரு கலைவாணி. என் கூட பிறந்த தம்பி ஹரிஷ், பத்தாவது படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு ஐ.டி.ஐ படிச்சுக்கிட்டிருக்கான். நான் குடும்பச்சூழல் காரணமா காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்லயே படிப்பை நிறுத்திட்டேன். இப்போ அப்பா அம்மாவுக்கு உதவியா மெரினாவுல மசாலா பொரிக் கடை வெச்சிருக்கேன். வெண்ணிலா
கொரோனா டைம்ல நான் காலேஜ் படிச்சுக்கிட்டிருக்கும்போது எங்க அம்மாவுக்கு வயித்துல கட்டி வந்துடுச்சு. காலேஜ் ஃபீஸ் கட்ட முடியல. பத்தாவதுல 390 மார்க்கும் ப்ளஸ் டூவுல 600க்கு 510 மார்க்கும் எடுத்தேன். முதலில அரசுக் கல்லூரியிலதான் அப்ளிகேஷன் போட்டிருந்தேன். ஆனா, எனக்கு சீட் கிடைக்கலப்போலன்னு நினைச்சுக்கிட்டு எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில சேர்ந்துட்டேன்.
அதுக்கப்புறம்தான், அரசுக் கல்லூரியில இருந்து சீட் கிடைச்ச தகவல் தெரிஞ்சது. அப்போ, என்னைச் சரியா கைடு பண்றதுக்கு ஆள் இல்ல. அதனால, எம்.ஜி.ஆர் ஜானகி காலேஜிலேயே பி.காம் படிச்சேன். ஃபீஸ் 50,000 ரூபாய் கட்டவேண்டியிருந்தது.
அப்பாவும் அம்மாவும் 10 பைசாவுக்கு வட்டிக்கு வாங்கித்தான் கொடுத்தாங்க. ஒரு செமஸ்டர்தான் எழுதினேன். தொடர்ந்து ஃபீஸ் கட்ட காசு இல்லாததால நின்னுட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். மெடிக்கல் ஷாப், சூப்பர் மார்க்கெட்ன்னு நிறைய இடத்துக்கு வேலைக்குப்போயி நான்தான் அந்த 50,000 ரூபாய் கடனை வட்டியோடு அடைச்சேன். பி.காம், எம்.காம்-ன்னு டபுள் டிகிரி முடிச்சுட்டு வங்கி வேலைக்குப் போகணும்ங்கிறதுதான் ஆசை. ஆனா, முதலாமாண்டுடனே என் கனவு சிதைஞ்சிடுச்சு. அமெரிக்க இளைஞர்
இப்போதும் அம்மாவோட ஹாஸ்பிட்டல் செலவுக்கு மாச மாசம் ஆயிரக்கணக்குல செலவாகுது. அப்பாவுக்கு சுகர் இருக்கு. அவரும் பீச்லதான் சின்னதா கடை வெச்சிருக்கார். நான் கடந்த ஜனவரி மாசம் இந்த மசாலா பொரிக் கடையை ஓபன் பண்ணினேன். அப்போதான், அமெரிக்கா அண்ணன் என் கடைக்கு வந்தாரு. ரொம்ப கேஷுவலா அன்பா பேசினார்.
சின்ன வயசிலேர்ந்தே தமிழ் மீடியத்துலதான் படிச்சேன். லேடி வில்லிங்டன் ஸ்கூலில்தான் படிச்சேன். ஆனா, இங்கிலீஷ் எனக்கு நல்லா வரும். நல்லா படிக்கிற பொண்ணுதான் நான். அந்த அண்ணன் இங்கிலீஷ்ல கேள்விகள் கேட்டுக்கிட்டே இருந்தார். நானும் எனக்கு தெரிஞ்ச இங்கிலீஷ்ல பதில் சொன்னேன். அவங்களுக்கு நான் பேசினது ரொம்ப பிடிச்சுப்போச்சு. யங்கர் சிஸ்டரை என்னன்னு கூப்பிடுவாங்கன்னு கேட்டார், தங்கச்சின்னு சொன்னேன். உடனே, அன்பா, அழகா என்னைத் தங்கச்சின்னு சொல்லிப் பேசினார். ஆனா, அவர் எடுத்த வீடியோ இவ்ளோ வைரல் ஆகும்னு நினைச்சுக்கூட பார்க்கல.வெண்ணிலா
அஞ்சு மாசத்துக்கு முன்னாடி எடுத்த வீடியோவை இப்போ போஸ்ட் பண்ணியிருக்காரு. இப்போ ரொம்பவே வைரலாக ஆரம்பிச்சிடுச்சு. நிறைய பேரு நீதானே பேசின, ரொம்ப நல்லா இங்கிலீஷ்ல பேசியிருக்கன்னு பாராட்டுறாங்க. அந்த அண்ணா, எனக்கு 500 ரூபாய் கிஃப்ட்டா கொடுத்தாங்க. நான் வேணாம்னுதான் சொன்னேன். பக்கத்துல இருந்த திருநங்கை அக்காதான் வாங்கிக்கோடின்னு சொன்னாங்க. சனி, ஞாயிறு மட்டும்தான் இங்க கடை போடுறேன். ஒருநாளைக்கு 700 ரூபாய் வரைக்கும் வருமானம் வரும். நானும் அப்பாவும்தான் குடும்பத்தைப் பார்த்துக்கிறோம். ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கணும்னு வீட்டுல சொல்லியிருக்காங்க. அதுக்குள்ள, டிகிரியை முடிக்கணும்னு இருக்கேன். அரசாங்கமோ, ட்ரஸ்ட்டோ ஹெல்ப் பண்ணினா நிச்சயமா நான் படிச்சு நல்ல ஒரு வேலைக்குப் போவேன்” என்கிறார் நம்பிக்கைத் தொனிக்கும் கண்களோடு.
http://dlvr.it/T915pH
Monday, 1 July 2024
Home »
» Marina Viral Girl: "காலேஜ் ஃபீஸ் கட்ட முடியாம ஃபர்ஸ்ட் இயர்லயே நின்னுட்டேன்! இப்போ..." - வெண்ணிலா







0 comments:
Post a Comment